டிரெண்டிங்

‘10 லட்சம் செலுத்தினால்தான் உடலை தருவோம்’: இறந்தவரின் குடும்பத்திற்கு மருத்துவமனை பதில்

‘10 லட்சம் செலுத்தினால்தான் உடலை தருவோம்’: இறந்தவரின் குடும்பத்திற்கு மருத்துவமனை பதில்

webteam

விருதுநகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடலை கட்டணம் செலுத்தினால் மட்டுமே தர முடியும் என மருத்துவமனை கூறியது முகம் சுழிக்க வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் எண்ணெய் மில் நடத்தி வரும் தொழிலதிபர் சிவக்குமார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ஜீலை 15ஆம் தேதி உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவக்குமார் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ள முதல்கட்டமாக ரூ.6 லட்சம் கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிவக்குமாருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு என மொத்தமாக ரூ.13 லட்சம் செலவு செய்ததாக சிவக்குமார் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக அவர் கோமாவில் இருந்ததை தெரிவிக்காமல் சம்மந்தப்பட்ட மருத்துவமனை சிகிச்சை அளித்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மொத்தம் 25 நாாட்களாக கொரானாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காாலை சிவக்குமார் உயிரிழந்தார்.

அவரது உடலை பெற வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் பணத்தை கட்டணமாக செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகக் கூறி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சிவக்குமார் மனைவி காளீஸ்வரி தனது குடும்பத்தோடு மனு அளிக்க வந்திருந்தார். சிவக்குமார் குடும்பத்தினர் ஆட்சியரிடம் முறையிட வந்ததை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், ரூ. 4 லட்சம் மட்டும் செலுத்தி உடலை பெற்றுக்கொள்ளுமாறு சமாதானம் செய்தனர். இதையடுத்து உடலை பெற்றுக்கொள்ள சிவக்குமாரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றனர்.