டிரெண்டிங்

”தமிழக எம்பிக்களை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்” : ஆ.ராசா விமர்சனம்

”தமிழக எம்பிக்களை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்” : ஆ.ராசா விமர்சனம்

kaleelrahman

தமிழக எம்பிகள் 9 பேரை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். பிரதமரை கட்டுப்படுத்தும் தகுதி தமிழக எம்.பி.க்களுக்கு உள்ளது என தேர்தல் பிரசாரத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடையே அவர் பேசும்போது...

கடந்த 2019 மக்களவை தேர்தலில் மாநிலத்தில் 39 இடங்களில் திமுக கூட்டணியே வென்றது. தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை தொடர்ந்து அழிக்க முயலும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரப்போவதில்லை. நீதிமன்றங்களை பார்த்து கூட பிரதமர் மோடி பயப்படுவதில்லை. ஆனால் மு.க.ஸ்டாலினையும் திமுக எம்பிகளையும் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்.

பிரதமரை கட்டுப்படுத்தும் தகுதி தமிழக எம்.பிக்களுக்கு உள்ளது. பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் பிரதமர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள். ஆனால், மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. கொரோனா பரவத் தொடங்கிய போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெளியே கூட வரவில்லை.

ஆனால், கொரோனா உச்சத்தில் இருந்த போதும் ஸ்டாலின் வெளியே வந்து மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவிகளை செய்தார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை.

டீசல் விலையை பிரதமர் மோடி குறைக்கவில்லை. தமிழ்நாடு செலுத்த வேண்டிய வரியை குறைத்து டீசல் விலையை திமுக ஆட்சி குறைத்துள்ளது. தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை, மகளிருக்கு இலவச பேருந்து சேவை மட்டுமின்றி, கொரோனா காலத்தில் மக்கள் நலன் கருதி திமுக அரசு செயல்படுகிறது என ஆ.ராசா பேசினார்.