டிரெண்டிங்

அமித்ஷா கேட்டதால் ஓ.கே. சொன்னேன்: ஓ.பி.எஸ்.

அமித்ஷா கேட்டதால் ஓ.கே. சொன்னேன்: ஓ.பி.எஸ்.

webteam

பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்க பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கேட்டுக் கொண்டதன் பேரில், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் ஆதரவை பாஜகவுக்கு அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக சார்பாக ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர்கள், எதிர்க்கட்சிகள் உட்பட நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் ஆதரவு திரட்டி வருகின்றனர். அதனடிப்படையில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதரவு கேட்டார். ஓ.பி.எஸ். அணியில் 12 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே அந்த அணியின் ஆதரவை பாஜக வேட்பாளருக்கு அளிப்பதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கேட்டுக் கொண்டதன் பேரில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கிறோம். ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து உயர் பதவிக்கு வந்த நல்ல வேட்பாளர் அவர். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பீகாரின் ஆளுநராகவும் இருந்துள்ளார். சிறந்த நிர்வாகியாகவும் விளங்குகிறார். எனவே எங்களுடைய ஆதரவை பாஜக வேட்பாளருக்கு அளிக்கிறோம்” என்று ஓ.பி.எஸ். கூறினார்.

முன்னதாக அதிமுக அம்மா அணியின் ஆதரவைக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பேசினார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுடைய ஆதரவை தெரிவிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். தினகரன் அணியில் 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.