டிரெண்டிங்

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - பிரேமலதா விஜயகாந்த் பதில்

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - பிரேமலதா விஜயகாந்த் பதில்

webteam

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் தேமுதிகவின் அலுவலக மேலாளர் செந்திகுமார் என்பவரின் திருமண நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா “வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என பொரும்பாலான தேமுதிக தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் செயற்குழு, பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரம் அதாவது தைப்பொங்கலுக்கு விஜயகாந்த் அறிவிப்பார்.

தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் இருக்கும். 2021 சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய திருப்புமுனை வெற்றியாக தேமுதிகவிற்கு அமையும். தற்போது அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம். மாறுப்பட்ட கருத்து இல்லை. மிகப்பெரிய ஆளுமைமிக்க இரண்டு பெரிய தலைவர்கள் தற்போது இல்லை. எனவே 2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அதனால் தேமுதிக எல்லா பலத்தோடும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.

2021 தேர்தல் மாறுதலான தேர்தல். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தலாக, தமிழக மக்களுக்கான தேர்தலாக நிச்சயம் இருக்கும். அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. நிறைகளும், குறைகளும் இணைந்த ஆட்சியாக தமிழக ஆட்சி உள்ளது. மத்திய அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். இன்னும் பலம் கொண்டு, இந்தியா வல்லரசாக பல திட்டங்களை செயல்படுத்தபட வேண்டும்” எனக் கூறினார்.