சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை சட்டம் சொல்வதே இறுதி தீர்ப்பு என அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவும், தேமுதிகவும் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளது. மிக நீண்ட இழுப்பறிக்குப் பின்பு அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புதிய தலைமுறையின் இன்று இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “8 வழிச்சாலைக்கு பாமக தடை வாங்கியிருப்பது உண்மை. முதலமைச்சரை பொறுத்தவரை அது ஒரு கனவுத்திட்டம் என அவர் நினைக்கிறார்.
அதற்கு நிச்சயம் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. அது கனவுத்திட்டமாக இருந்தாலும் விவிசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவெல்லாம் உண்மை. எங்களை பொறுத்தவரை சட்டம் என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி தீர்ப்பு. ஒரு திட்டம் கொண்டு வருவதே மக்களுக்காகத்தான். மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்தத் திட்டமாக இருந்தாலும் வரவேற்கிறோம். நாட்டின் முன்னேற்றமும் அவசியம். வேலைவாய்ப்பு இல்லை என்ற குறையை சொல்லக்கூடாது” எனத் தெரிவித்தார்.