திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து தேர்தலுக்கு பிறகே முடிவு செய்வோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் வலுவாக உள்ளன. தமிழகத்தில் இது ஒரு வலுவான கூட்டணி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களை வென்றது. அதே போன்று, இந்தத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு கூறியதுபோல, திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்.
2006ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக நான் இருந்த போது திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வர் ஆனார். அதே போன்று இந்த முறை மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பரப்புரை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
ஆனால், வரும் 28ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அதே போல பிரியங்கா காந்தியும் பரப்புரைக்காக வருகிறார். திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம்” எனத் தெரிவித்தார்.