டிரெண்டிங்

வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைந்ததாக தெரிவித்த பூனம் மகாஜன்

Rasus

108 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 2 கோடியே 25 லட்சம் ரூபாயாக குறைந்து விட்டது என பாரதிய ஜனதா எம்.பி பூனம் மகாஜன் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

மறைந்த மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகளான பூனம் மகாஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வடமத்திய மும்பை மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பூனம் மகாஜன் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது சொத்து மதிப்பு 108 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் நிலையில் 5 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பை குறைத்து காண்பித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூனம் மகாஜன் தற்போது தன் கையிருப்பு 75 ஆயிரம் ரூபாய் என்றும் கணவரிடம் 29 ஆயிரத்து 650 ரூபாய் இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் 2 ஆடி கார்கள் இருப்பதாக கூறியிருந்த அவர், தற்போது 11 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு ஹோண்டா கார் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி சொத்து மதிப்பு திடீரென குறைந்ததற்காக காரணம் அவரது கணவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்வதாகவும் அதில் ஏற்பட்ட நஷ்டத்தில் சொத்துகளை விற்று கடனை அடைத்துவிட்டதால் தற்போது சொத்து மதிப்பு குறைந்ததாகவும் கூறுகிறார்.