டிரெண்டிங்

பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்குமா? - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்குமா? - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

webteam

அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, அதற்கு தேமுதிகதான் முடிவெடுக்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “பிரதமர் தமிழகத்திற்கு வருவது தமிழக மக்களுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதைப் போல மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கிறது. பிரதமர் எப்போது வந்தாலும் மத்திய அரசின் பல கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். திமுகவினர் பதவி சுகத்தை மட்டும் அனுபவித்தவர்கள். நாட்டை கொள்ளை அடித்தவர்கள். திமுகவோடு சேர்ந்துள்ள நால்வர் அணி தேமுதிகவோடு கூட்டணியில் இருந்தபோது என்ன நிகழ்ந்தது என்று 2016 தேர்தலிலே பார்த்தோம்” எனத் தெரிவித்தார். 

மேலும் தேமுதிக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, அதற்கு தேமுதிகதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அது அதிமுக கொடுக்கவேண்டியது என்று பதில் அளித்தார்.