டிரெண்டிங்

பொள்ளாச்சி: 1.72 கோடி மோசடி... கேரளாவை சேர்ந்த 5பேர் கைது.. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்.!

பொள்ளாச்சி: 1.72 கோடி மோசடி... கேரளாவை சேர்ந்த 5பேர் கைது.. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்.!

kaleelrahman

பொள்ளாச்சி அருகே ரிசார்ட் உரிமையாளரை ஏமாற்றி ரூ.1,72,50,000 பணம் மோசடி செய்த வழக்கில் கேரளா மோசடி கும்பலை சேர்ந்த 5 பேர் கைது துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரிசார்ட் உரிமையாளர் முத்து (67), இவர் செப்டம்பர் 2 ஆம் தேதி வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் உள்ள மற்றொரு வங்கி லாக்கரில் வைப்பதற்காக, அவரிடம் நண்பராக பழகி வந்த அனுப்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளார்.


ஆனால் அனுப்குமார் வங்கி லாக்கரில் பணத்தை வைக்காமல் தலைமறைவாகியுள்ளார், பணத்தை பறிகொடுத்த ரிசாட் உரிமையாளர் முத்து ஆனைமலை காவல்நிலையத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி புகார் அளித்தார், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாகியுள்ள அனுப்குமார் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.


இந்நிலையில், நேற்று இரவு கேரள மாநில எல்லைப் பகுதியான செம்மனாம்பதி பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த மோசடி கும்பலை சேர்ந்த மனோஜ், சிம்சன், சசிகாந்த், சதீஷ், பிலால் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


இதையடுத்து, பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு 5 பேரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அனுப்குமாரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.