உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ரஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் காணச்சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தர பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸார் தன்னை லத்தியால் அடித்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆறுதல் கூறச்சென்றவரை கைது செய்ததற்காக ப.சிதம்பரம், ஷரத் பவார் போன்ற அரசியல்வாதிகளும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ப.சிதம்பரம் தனது ட்வீட்டில், ’’உத்தரபிரதேச மாநிலத்திற்கென்று தனி சட்டம் உள்ளது. நாட்டின் சட்டங்கள் அவர்களுக்குப் பொருந்தாது. ஒரு கொடூரமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை அரசியல் தலைவர்கள் சந்திக்க நினைத்தால் அதில் தவறு என்ன இருக்கிறது?
அந்த இரண்டு தலைவர்களும், வன்முறையில் ஈடுபடவுமில்லை, ஆயுதங்கள் கொண்டுசெல்லவுமில்லை, அவர்கள் அமைதி முறையில்தான் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களை ஏன் போலீஸார் தடுக்கவேண்டும்?
ஏன் இவ்விரண்டு தலைவர்களையும் கைது செய்து, அங்கிருந்து கூட்டிச்செல்ல வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும்போது இருவரும் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷரத் பவார், ‘’ராகுல் காந்திமீது உத்தர பிரதேச போலீஸாரின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு நான் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டத்தை மதித்து, ஜனநாயகக் கொள்கைகளை கடைபிடிக்கவேண்டியவர்கள் அதற்கு எதிராக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது’’ என அவர் குறிப்ப்பிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு, ‘’யோகி ஆதித்யநாத், நீங்கள் ஒரு அரசியல்வாதி என்பதைத் தாண்டி, ஒரு மனிதனாக இருப்பதற்கே தகுதியற்றவர். இனிமேல் தங்களை ஒரு அரசியல்வாதியாக பார்க்கமாட்டேன். அந்த வார்த்தைக்கு பொருத்தமான ஒருவரை அவமதித்து விட்டீர்கள். உபி போலீஸ் மற்றும் உங்களை நினைத்தால் அவமானமாக இருக்கிறது. ராகுல் காந்திக்கு சல்யூட். தொடர்ந்து செல்லுங்கள்’’ என்று கூறியுள்ளார்.