டிரெண்டிங்

தேசிய அரசியலில் விவாத பொருளான மோடி-கருணாநிதி சந்திப்பு

தேசிய அரசியலில் விவாத பொருளான மோடி-கருணாநிதி சந்திப்பு

rajakannan

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது, தேசிய அளவிலான அரசியலில் விவாதப் பொருளாக மாறியது. 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். இதில் கருணாநிதி உடனான சந்திப்பு குறித்த செய்தி அவர் சென்னை விமான நிலையம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் வரை யாருக்கும் தெரியாது. இது ஒரு அறிவிக்கப்படாத சந்திப்பு ஆகும். 8.35 மணியளவில் இந்த செய்தி வெளியாகி சில மணி நேரங்களில் சந்திப்பும் நிகழ்ந்து மோடியும் சென்னையை விட்டு கிளம்பிவிட்டார்.

இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது. பிரதமர் மோடி இதற்கு முன்பும் பல்வேறு முறை சென்னை வந்திருந்த போதும் கருணாநிதியை சந்திக்கவில்லை. இந்த முறை அறிவிப்பு ஏதுமின்றி திடீரென சந்தித்துள்ளார். இருப்பினும் மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதை நிமிர்த்தமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக திமுக, பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் இருக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளன

இதுவரை தமிழகத்தில் ஆளும் அதிமுக உடன் பாஜக நெருக்கம் காட்டி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உடனான மோடியின் சந்திப்பு அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தேசிய அரசியலை பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் உள்ள 18 எதிர்க்கட்சிகளில் திமுக முக்கிய கட்சியாக அங்கம் வகித்து வருகின்றது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜக அரசுக்கு எதிராக எதிர்ப்பை ஒருங்கிணைந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் இணைந்து நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்துள்ளன. திமுக நாளை போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் மோடி-கருணாநிதி சந்திப்பு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முக்கிய தலைவராக அங்கம் வகித்த நிதிஷ்குமார் திடீரென விலகி பாஜக உடன் சேர்ந்தார்.

இந்த நிலையில், தொடர்ந்து பாஜக அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுகவிற்கு இந்த விமர்சனங்கள் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தரப்பில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டாலும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றே பலரும் தெரிவிக்கின்றனர்.