டிரெண்டிங்

பைக்கை பிடிங்கிய காவலர்கள்: கெஞ்சியும் கொடுக்காததால் விரக்தியில் தீக்குளித்த இளைஞர்..!

பைக்கை பிடிங்கிய காவலர்கள்: கெஞ்சியும் கொடுக்காததால் விரக்தியில் தீக்குளித்த இளைஞர்..!

webteam

ஆம்பூரில் காவலர்கள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் விரக்தி அடைந்த இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வழியாக செல்லும் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காவலர் சந்திரசேகர் என்பவர் பொதுமுடக்கம் சோதனைப் பணியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆம்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முகிலன் என்பவரை தடுத்து நிறுத்தியுள்ளார். அத்துடன் அவரது இருவாகனத்தை பறிமுதல் செய்துள்ளார். முகிலன் எவ்வளவு கெஞ்சியும் அவரது இருசக்கர வாகனம் திரும்ப அளிக்கப்படவில்லை எனப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த முகிலன் வீட்டிற்கு சென்று மண்ணெண்ணெயை எடுத்துக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த இடத்திற்கு வந்தார். அத்துடன் தனது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்களின் முன்னிலையில் மண்ணெண்ணெயை மேலே ஏற்றிக் கொண்டு தீக்குளித்தார். தீப்பற்றி எறிந்த அவரை, தீக்காயங்களுடன் மீட்டு அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சையளித்த மருத்துவமனை மருத்துவர்கள் முகிலனுக்கு 90 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு முதலுதவி செய்து, வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சரக டிஐஜி காமினி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.



இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், அங்கு பணியில் இருந்த 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இதுகுறித்து டிஎஸ்பி பிரவீன் குமார் தலைமையில் விசாரணை நடைபெறும் சம்பவம் என்றும் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சந்திரசேகர், லட்சுமணன் விஜயகுமார் ஆகிய 3 காவலர்களும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த செல்வமணி, கல்பனா, ராஜேஷ் , ஜானகி ஆகியோரும் பணியில் இருந்துள்ளனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற எம்பி ரவிக்குமார் தன்னுடைய ட்விட்டரில், “ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை போலிஸார் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் முகிலன் கவலைக்கிடம். தமிழக அரசே! இதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடு! கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி அத்துமீறும் போலீஸாரைக் கட்டுப்படுத்து” என்று குறிப்பிட்டுள்ளார்.