டிரெண்டிங்

“புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி பாஜகவை பலப்படுத்தும்” - பிரதமர் மோடி 

“புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி பாஜகவை பலப்படுத்தும்” - பிரதமர் மோடி 

webteam

பாஜகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

மக்களவைத் தேர்தல் 2019ல் பாஜக கட்சி அதிக இடங்களில் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இந்தச் சூழலில் பாஜக தனது கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை தொடங்கும் இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இன்று வாரணாசியில் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி பாஜகவில் பலதரப்பட்ட மக்கள் இணைவதற்கு உதவியாக இருக்கும். அத்துடன் இது பாஜகவை பலப்படுத்தும். நமக்கு பெரிய முன்னுதாரணமாக உள்ள ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளான இன்று இந்த நிகழ்வு தொடங்கவுள்ளது. மேலும் இன்று காலை 11.30 மணிக்கு வாரணாசியில் நடைபெறும் கூட்டத்தில் நான் பட்ஜெட் குறித்தும் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் உரையாற்ற உள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்து கூடுதலாக 20 சதவிகிதம் அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதேபோல வரும் நாட்களில் ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். 

ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாக்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் சாலை மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் பங்கேற்கின்றனர்.