பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடுவுக்கு ஆதரவு தருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி ஆதரவு கோரினார்.
தொலைபேசி வாயிலாக முதலமைச்சரிடம் பேசிய பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதேபோன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டுள்ளார். இதையடுத்து வெங்கய்யா நாயுடுவை ஆதரிப்பதாக பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது.
பாஜக சார்பாக துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வெங்கய்யா நாயுடு அரசியலில் நீண்ட கால அனுபவம் உடையவர் என அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.