டிரெண்டிங்

கருணாநிதியை மோடி தனது வீட்டுக்கு அழைத்தார்: கனிமொழி

கருணாநிதியை மோடி தனது வீட்டுக்கு அழைத்தார்: கனிமொழி

rajakannan

டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுக்க கருணாநிதிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த மோடி, கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். மோடியின் சென்னை பயணத்தின் நிகழ்ச்சி நிரல் பட்டிலியலில் கருணாநிதியுடனான சந்திப்பு இல்லாத நிலையில், திடீரென இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார் என்று கனிமொழி தெரிவித்தார். இது குறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுக்க கருணாநிதிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக கூறினார்.

மேலும் “தன்னை சந்திக்க வந்த பிரதமர் மோடிக்கு, கருணாநிதி கைகொடுத்தார். புத்தகங்களை பரிசாக வழங்கினார். ஓய்வு எடுக்க டெல்லிக்கு வர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க முடியாது. மரியாதை வைத்திருக்கூடிய மூத்த தலைவரை பார்க்க பிரதமர் வந்திருக்கிறார். எங்கள் குடும்பத்தினர் சார்பாக பிரதமருக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன். இதனிடையே வெளியே நின்று கொண்டிருந்த தொண்டர்கள், கருணாநிதியை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஸ்டாலின் இதை கருணாநிதியிடம் தெரிவித்தார். தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கருணாநிதி வெளியே வந்து கையசைத்தார். முன்பை விட கருணாநிதியின் உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் தொண்டர்களை சந்திக்கும் நிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார். 

இதனிடையே, கருணாநிதியும், கனிமொழியும் செல்பி எடுத்துக்கொண்ட படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.