டிரெண்டிங்

கிணற்றில் விஷவாயு : இளைஞரை மீட்டு உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்..!

கிணற்றில் விஷவாயு : இளைஞரை மீட்டு உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்..!

webteam

பெரம்பலூரில் விஷவாயு இருப்பதை உணர்ந்த பின்னரும் தனது உயிரை தியாகம் செய்து இளைஞரின் உயிரைக்காப்பாற்றிய தீயணைப்பு வீரரின் மரணம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையத்தில் விவசாய கிணற்றிற்குள் ராதாகிருஷ்ணண், பாஸ்கர் என்ற இரண்டு வாலிபர்கள் மயக்கமடைந்து கிடப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு நேற்றிரவு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் இருவரும் கிணற்றுக்கு வெடி வைக்கும் போது தாக்கிய விஷவாயுவால் மயக்கமடைந்துள்ளனர். இதை அறிமால் உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு மீட்புகுழுவினர் வாலிபர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ராஜ்குமார் என்ற தீயணைப்பு வீரர் கயிறு கட்டி கிணற்றிற்குள் இறங்கியுள்ளார். ராதாகிருஷ்ணண் இறந்துவிட்டார் என்பதை அறிந்து கொண்ட ராஜ்குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த பாஸ்கரை மீட்க முயன்றுள்ளார். வெடி வைத்ததன் காரணமாக கிணற்றிற்குள் இருந்த விஷவாயு அவரையும் தாக்க மயக்கமடைய தொடங்கியுள்ளார்.

இருப்பினும் தன்னுயிரை பற்றி கவலை கொள்ளாமல் தான் கட்டியிருந்த உயிர்காக்கும் கயிரை பாஸ்கர் மார்பில் கட்டி அவரை மேலே அனுப்பிவிட்டு, முற்றிலும் மயக்கமடைந்தார். இதனை அறிந்து மேலே நின்ற சக வீரர்களான தனபால், பால்ராஜ் ஆகியோர் ராஜ்குமாரை மீட்க கிணற்றிற்குள் இறங்கியுள்ளனர். அவர்களும் மயக்கமடையவே நிலமை மோசமடைந்தது. பின்னர் அங்கிருந்த மற்ற அனைவரும் சேர்ந்து தீயணைப்பு வீரர்கள் மூவரையும் மீட்டு மேலே கொண்டுவந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் தீயணைப்பு வீரர் ராஜ்குமார் உயிரிழந்தார். மற்ற இரு வீரர்களும் சிகிச்சைக்கு பெற்று வருகின்றனர்.

கிணற்றிற்குள் வெடிவைத்த சம்பவத்தை மறைத்து வாலிபர்கள் தவறி விழுந்துவிட்டார்கள் என்று தெரிவித்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்தாக கூறும் தீயணைப்பு வீரர்கள், உண்மையை கூறியிருந்தால் அதற்கான பாதுகாப்பு உபகரணங்களுடன் செயல்பட்டிருப்போம் என்கின்றனர். அந்த ஆபத்தான சூழலிலும் வாலிபரை உயிருடன் காப்பாற்றி, தன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் செயல் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. உயிரிழந்த வீரர் ராஜ்குமார் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு உமா என்றொரு மனைவியும், 6 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ராஜ்குமார் இறந்ததால் அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.