டிரெண்டிங்

ஏழை மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் செலவில் 16 செல்போன்கள்.. முன்னுதாரணமான ஆசிரியை!

ஏழை மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் செலவில் 16 செல்போன்கள்.. முன்னுதாரணமான ஆசிரியை!

kaleelrahman

பெரம்பலூர் அருகே, ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக 1 லட்சம் ரூபாய் செலவில் 16 பேருக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார் அரசு பள்ளி ஆசிரியை.


பெரம்பலூர் அருகே எளம்பலூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில வழியில் 16 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர் இவர்கள் அனைவரும் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்பு தொடங்கி நடந்துவருகிறது.

இந்த 16 மாணவர்களிடமும் செல்போன் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மாணவர்களின் ஆர்வத்தை தெரிந்து கொண்ட அதே பள்ளியில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியை பைரவி, மாணவர்களின் சிரமத்தை போக்குவதென முடிவெடுத்தார். அதன்படி தன்னிடம் பயிலும் 16 மாணவர்களுக்கும் தன்னுடைய சொந்த செலவில், 1லட்ச ரூபாய் மதிப்பில் செல்போன் வாங்கித் தந்ததோடு சிம்கார்டு மற்றும் ரீசார்ஜ் செய்தும் தந்துள்ளார்.


நான் இதை உதவியாக செய்யவில்லை சேவையாக கருதுவதாக கூறும் ஆசிரியை பைரவி மேலும் 25 மாணவர்களுக்கு செல்போன் வாங்கித்தர முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இனி தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு சேரும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக செல்போன் வாங்கித்தர உள்ளதாகவும் அதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச்செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அதனைத்தொடர்ந்து தற்போது ஆன்லைன் வகுப்பில் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்கு பெற்றுவரும் மாணவர்கள் கணித ஆசிரியை பைரவிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலரில் அதை செயல்படுத்தி காட்டிய ஆசிரியை பைரவி பிற ஆசிரியர்களுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணம். இவரை போன்ற பலரும், அவர்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்தால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுபள்ளி மாணவர்களும் போட்டி போட முடியும் என்பதில் மிகையில்லை.