டிரெண்டிங்

”ஆலங்குடி வேட்பாளரை மாற்றுங்கள்”- முதல்வரிடம் கோரிக்கை வைக்க காத்திருந்த அதிமுக தொண்டர்கள்

”ஆலங்குடி வேட்பாளரை மாற்றுங்கள்”- முதல்வரிடம் கோரிக்கை வைக்க காத்திருந்த அதிமுக தொண்டர்கள்

Veeramani

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி , பிரச்சாரத்திற்கு செல்லும் சாலையில் கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் வழங்க பதாகைகளோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் காத்திருந்தனர். ஆனால் சாலையில் நின்ற அதிமுகவினரை பார்க்காமல் முதலமைச்சர் பழனிசாமி  கடந்து சென்றதால், காத்திருந்த அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக தலைமை வேட்பாளர் பட்டியல் அறிவித்த நாள் முதல் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தர்ம.தங்கவேல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து 45 தினங்களே ஆன நிலையில், அவருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாய்ப்பை வழங்கி கொடுத்ததாகவும் ஆலங்குடி தொகுதியில் அதிமுக கட்சிக்காக பாடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் விருப்பமும் கொடுத்திருந்த நிலையில் அவர்களில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பை வழங்காமல் புதிதாக அதிமுக கட்சியில் சேர்ந்து அதிமுகவினருக்கு எந்தவித அறிமுகமும் இல்லாத நபருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலங்குடி தொகுதிக்கு விருப்பமனு கட்டிய சிலரை அழைத்து புதுக்கோட்டையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி இன்று  காலைக்குள்  வேட்பாளர் மாற்றப்படுவார் என்று கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. ஆனால் இதுவரை ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றப்படவில்லை.

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத்  தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்‌.  விராலிமலையில் பிரசாரத்தை தொடங்கிய தமிழக முதலமைச்சர் புதுக்கோட்டை திருமயம் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அறந்தாங்கியிலிருந்து  ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கைகாட்டியில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பிரச்சாரத்திற்கு செல்லும் சாலையில் பனங்குளம் என்னும் இடத்தில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர், வேட்பாளரை மாற்றுங்கள் எங்கள் முதல்வரே என்று பதாகைகள் ஏந்தி காலை முதல் காத்து நின்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கூடியிருந்த அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வேட்பாளரை மாற்றக்கோரி மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றுவிடுவோம் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அதற்கு சம்மதம் தெரிவித்து சாலையின் இருபுறங்களிலும் கயிறை கொண்டு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பாணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அதிமுகவினர் கூடியிருந்த பனங்குளத்தை கடந்து செல்லும்பொழுது  அதிமுகவினர்  வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கூறி முழக்கம் எழுப்பினர்.

ஆனால் தமிழக முதலமைச்சர் அவரது வாகனத்தை நிறுத்தாமல் அதிமுக கட்சியினரையும் கடந்து சென்றதால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர்  சாலையில் படுத்தும் அமர்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் காவல் துறையினர் அதிமுகவினரை முதலமைச்சரிடம் மனு கொடுக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறி முழக்கங்கள் எழுப்பினர்‌.

இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து நீண்ட நேரத்திற்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.