டிரெண்டிங்

ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார் ஹர்திக் படேல்

ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார் ஹர்திக் படேல்

rajakannan

பட்டிதார் தலைவர் ஹர்திக் படேல், ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி கடந்த 2015-ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல். 25 வயதாகும் ஹர்திக் படேல், பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரத்தில் பெரிய அளவில் கூட்டம் அலைமோதியது. 

இந்நிலையில், குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையில் ஹிர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

ஹர்திக் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மகாத்மா காந்தி இதேநாளில்தான் தண்டி யாத்திரையை தொடங்கினார். அவர் பிரிட்டீஷ் ஆட்சியை வெளியேற்றினார். நாட்டினை வலிமைபடுத்திய சுபாஷ் சந்திர போஸ், நேரு, சர்தார் வல்லபாய் படேல், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களால் தலைமை ஏற்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் நான் சேர்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதன் மூலம் குஜராத் மாநிலத்தின் 6 கோடி மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்ற முடியும்” என்றார். 

அதோடு, “காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் ஏன் தேர்வு செய்தீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். நேர்மையானவர் என்பதால் ராகுல் காந்தியை தேர்வு செய்தேன். ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்பட அவர் விரும்பவில்லை” என்றார். முன்னதாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தின் ஜம்நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக ஹர்திக் படேல் தெரிவித்திருந்தார்.