தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவார காலத்தில் கொரோனா தொற்று 3 மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது பிற மாவட்டங்களுக்கும் பரவல் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 17ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொற்றின் வேகம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. மதுரையில் மட்டுமே கொரோனா பாதிப்பு 493 லிருந்து 1,277 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் 784 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரானோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 816 லிருந்து 1,428 ஆக உயர்ந்துள்ளது. 611 புதிய தொற்றுகள் கடந்த 8 நாட்களில் கண்டறியப்பட்டுள்ளன. இதேபோல, வேலூரில் 194ல் இருந்து 750 ஆகவும், திருச்சியில் 179ல் இருந்து 461 ஆகவும், தூத்துக்குடியில் 487ல் இருந்து 756 ஆகவும், தேனியில் 164ல் இருந்து 437 ஆகவும் அதிகரித்துள்ளன.
ஏப்ரல், மே மாதங்களில் இருந்தது போன்ற எச்சரிக்கை உணர்வு குறைந்திருப்பது, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவை பின்பற்றப்படாததே இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள். அதேபோல், அதீத அச்சத்தின் காரணமாக சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.