பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கம் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் இங்கு பலர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி தலைவர் சாந்தி வின்சென்ட் தலைமையில் உதவி செய்து வருகின்றனர்.
தனியார் நிறுவனமான சுபகரா கம்பெனி, எண்டர்பிரைஸ் அன் எண்டர்பிரைஸ் கல் கம்பெனி, அல்தாப் கம்பெனி, டோவர் இந்தியா மற்றும் மெடிமிக்ஸ் சோப் கம்பெனி ஆகியோரிடம் நிதி பெற்று அதன் மூலம் 5 ஆயிரம் குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி ,காய்கறி என 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பன்சத்திரம், சான்ட்றோ சிட்டி உள்ளிட்ட பகுதியில் வீடு,வீடாக சென்று வழங்கி வருகின்றனர். முன்னதாக இந்த நிகழ்வை ஆய்வாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார்.