டிரெண்டிங்

ஃபேஸ்புக்கில் கேள்வி கேட்ட நபர் : வீடு புகுந்து தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்

ஃபேஸ்புக்கில் கேள்வி கேட்ட நபர் : வீடு புகுந்து தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்

webteam

மயிலாடுதுறையில் ஊர்ப்பலகை தொடர்பாக ஃபேஸ்புக்கில் கேள்வி கேட்ட நபரை வீடு புகுந்து தாக்கிய ஊராட்சித் தலைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் இளையாளுர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுக்ரியா பர்வீன். அதிமுகவை சேர்ந்த இவருக்கு பதிலாக, அவரது கணவர் தமிமுன் அன்சாரி என்பவர் ஊராட்சி பணிகள் அனைத்தையும் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஊராட்சியில் துணைத்தலைவராக இருப்பவர் சம்சுதீன். இவர் திமுகவை சேர்ந்தவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக ஊராட்சி வரவேற்பு பெயர் பலகை அமைக்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் சம்சுதீன் பெயர் இல்லை.

பெயர் பலகையில் துணைத்தலைவர் பெயரை எழுதாதது ஏன் ? என திமுக பிரமுகர் ஜெகர்யூசப் என்பவர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தார். இதைக்கண்ட தமிமுன் அன்சாரி கோபமடைந்து பட்டப்பகலிலேயே ஜெகபர்யூசுப் வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்ததாக தெரிகிறது.

இந்தக்காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிமுன் அன்சாரி மீது கொலை மிரட்டல், வீடு புகுந்து தாக்குதல் போன்ற 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிமுன் அன்சாரியை தேடி வருகின்றனர்.