டிரெண்டிங்

அதிகம் இயர்போன் பயன்படுத்துபவரா நீங்க? மறக்காம இதை படிங்க..!

அதிகம் இயர்போன் பயன்படுத்துபவரா நீங்க? மறக்காம இதை படிங்க..!

Sinekadhara

டெக்னாலஜி என்பது ஒரு வரமானாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் சாபமே. இப்போது எங்கு சென்றாலும் காதில் இயர்போனை (ஹெட்போன்) மாட்டிக்கொண்டு செல்வது வழக்கமாகிவிட்டது. வாகனம் ஓட்டும்போதுகூட காதில் இயர்போனை மாட்டிக் கொள்வதால் சாலையில் ஏற்படும் விபத்துகளும் ஏராளம். இது வெளியே மட்டுமல்லாமல் உடல் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இயர்போன் பயன்படுத்துவதால் வரும் பிரச்னைகள்

அதிகமாக இயர்போன் பயன்படுத்தினாலே எல்லோரும் சொல்லக்கூடிய, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் காது கேட்காமல் போகும் என்பதுதான். சாதாரணமாக கேட்பதைவிட ஹெட்போனில் கேட்கும்போது சத்தம் அதிகமாக இருக்கும். மேலும் காது சவ்வில் சத்தத்தின் வீரியம் அதிகமாக இருக்கும். 90 டெசிபலுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது கேட்கும் திறன் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. 

இப்போது வரும் போன்களில் இயர்போனை மாட்டிக் கேட்கும்போது, ’குறிப்பிட்ட அளவுக்கு மேல் சத்தத்தை அதிகப்படுத்தினால் கேட்கும் திறன் பாதிக்கப்படும்’ என்ற எச்சரிக்கை வருகிறது. அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எனவே தொடர்ந்து பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். 

காதுகளில் தொற்று

நிறையப் பேருக்கு ஒரே  இயர்போனை மாற்றி மாற்றி உபயோகிக்கும் பழக்கம் இருக்கும். அதுவும் நண்பர்களாக இருந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. இரண்டு பேர் ஒரு இயர்போனை மாட்டிக்கொண்டு இருப்பார்கள். இது மிகமிக தவறு. காதின் வெளிப்புறம் தானே என்று நாம் மாட்டிக்கொள்ளும்போது பல தொற்றுகள் காதுக்குள் பரவ நாமே வழிவகுக்குகிறோம். எனவே தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மற்றவர்களின் இயர்போனை பயன்படுத்த நேரிட்டால் சானிடைஸரால் நன்றாகத் துடைத்துவிட்டு பயன்படுத்தவும். இதனால் தேவையில்லாத தொற்றுகளிலிருந்து தப்பிக்கலாம்.

காதுவலி

அளவுக்கு அதிகமாக இயர்போன் பயன்படுத்தும்போது அதிக அழுத்தத்தால் காதின் வெளிப்புறத்தில் வலி ஏற்படும். அதோடு நில்லாமல் அளவுக்கு அதிகமான சத்தத்தால் காதின் உட்புற பாகங்களிலும் அதிர்வு காரணமாக இரைச்சலும் வலியும் ஏற்படும்.

காது மறத்துப்போதல்

ஒருசிலர் எப்போதும் இயர்போனை கழற்றாமல் காதிலேயே மாட்டிக்கொண்டு இருப்பார்கள். ஏதாவது ஒரு சத்தம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என அடிமையாகிப் போயிருப்பார்கள். இவர்களுக்கு காதின் உணர்வுத்தன்மை குறைந்து மறத்துப்போகும். இதனால் தற்காலிகமாக காது கேட்காமல் போகும் வாய்ப்புகள் அதிகம். இதையே தொடர்ந்து செய்யும்போது நிரந்தரமாக கேட்கும்தன்மையை இழக்க நேரிடும்.

மூளை பாதிப்பு

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இயர்போனானது மின்காந்த அலைகளை உருவாக்கும். காதின் உட்புற பகுதிகள் மூளையுடன் இணைந்துள்ளதால் இது மூளையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

மனநல பாதிப்பு

இயர்போனை பயன்படுத்துவதே ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவதின் வெளிப்பாடுதான். இந்த உலகத்தையே மறந்து அக்கம்பக்கத்தினரின் தொடர்பை துண்டித்துவிடும். இதனால் மனதளவிலும் பாதிக்கப்படுவர்.