டிரெண்டிங்

சசிகலா அணி தாக்கல் செய்த ஆவணங்கள் போலி: ஓபிஎஸ் அணி

சசிகலா அணி தாக்கல் செய்த ஆவணங்கள் போலி: ஓபிஎஸ் அணி

webteam

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட ஏராளமான ஆவணங்கள் போலியானவை என்றும், பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் பன்னீர்செல்வம் அணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். 
இது தொடர்பாக பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் இன்று புதிய மனு ஒன்றையும், முறைகேடுகள் நடைபெற்றதற்கான சில ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சசிகலா அணியினருக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இரு அணிகளுமே தேர்தல் ஆணையத்தில் லட்சக்கணக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் தேர்தல் ஆணையம் கொடுத்த கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் சில கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி சசிகலா அணியின் சார்பாக தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
சசிகலா அணியினருக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று பன்னிர்செல்வம் அணியின் சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா அணி சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான ஆவணங்களில் பல போலியானவை. இதன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தேர்தல் ஆணையத்தில் புதிய மனுவை ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ளனர். அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்தனர்.,
உதாரணமாக சசிகலா அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது ஏழுமலை. இதே போல் தேன்மொழி என்ற கட்சி உறுப்பினரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிராமண பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது ஜானகி என்பவர். 
பாப்பாத்தி என்பவற்றின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிராமண பத்திரத்தில் பிரியா என்பவரின் கையெழுத்து இடம் பெற்றிருக்கிறது. இது போன்று பல ஆயிரக்கணக்கான ஆவணங்களும் போலியானவை என்றும் இவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பதோடு, போலியான ஆவணங்கள் தாக்கல் செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மைத்ரேயன் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.