டிரெண்டிங்

சொத்துகளை கட்சிக்கு எழுதி வைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தயாரா?: வெற்றிவேல்

Rasus

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி ஆகியோரின் சொத்துகள் மற்றும் அவர்களின் பினாமி சொத்துகளை கட்சிக்கு எழுதி வைக்க தயாரா என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் எம்எல்ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொள்ளுங்கள் என சும்மா இருந்த சசிகலாவை கெஞ்சியது யார்? பொதுக்குழு கூடி, எல்லோரும் கையெழுத்து போட்டு தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாதாரண சூழ்நிலையில் சிறைக்கு செல்ல நேர்ந்தபோது சசிகலா துணைப் பொதுச்செயலாளரை நியமித்தார்கள்” என்றார்.

மேலும், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஓபிஎஸ் தான் இரட்டை இலை சின்னத்தை முடக்கினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டது உலகத்திற்கே தெரியும். தற்போது மோசடியாக செயல்படுகிறார். திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் பதவி போய்விடும் என்று கோமாளித்தனமாக பேசுகிறார். நமது எம்ஜிஆர், ஜெயா டிவி ஆகியவற்றை சசிகலாவிடம் கேட்டு கட்சிக்காக எழுதி வைக்க நாங்கள் தயார். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், வேலுமணி, தங்மணி ஆகியோரின் சொத்துகள் மற்றும் அவர்களின் பினாமி சொத்துகளை கட்சிக்கு எழுதி வைக்க சொல்லுங்கள். முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்திலும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர்” என்று வெற்றிவேல் கூறினார்.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது எனவும், குருமூர்த்தி என்பவர் தனிப்பட் நபர். அவர் பாஜகவா, தி.க.வா. ஆர்.எஸ்.எஸ்ஸா என்பது எங்களுக்கு தெரியாது எனவும், இந்த விவகாரத்திற்கும் பாஜக-விற்கும் சம்பந்தம் உள்ளதாக நினைக்கவில்லை எனவும் வெற்றிவேல் கூறினார். பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை என்றும், அரசாங்கத்தை வைத்துக்கொண்டு எங்களை மிரட்டப் பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.