ஓபிஎஸ் தரப்பும், முதலமைச்சர் பழனிசாமி தரப்பும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என டிடிவி தினரகன் அணி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தினகரன் அணி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் " ஜெயலலிதா மறைந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இப்போது விசாரணை கமிஷன் என்பது தேவையில்லாத ஒன்று. விசாரணை கமிஷன் வைக்கும் அளவிற்கு என்ன தவறு நடந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை. விசாரணை கமிஷன் வைத்தால் இதே பழனிசாமி, ஓபிஎஸ், ஆளுநர், பிரதமர் உள்பட அனைத்து மருத்துவர்களும் விசாரணை கமிஷனுக்குள் வந்தாக வேண்டும்.
யாரோ சொல்கிறார்கள் என விசாரணை கமிஷன்கள் வைக்கிறார்கள். விசாரணை கமிஷன் வைப்பது இருக்கட்டும். உடனுக்குடன் ரிசல்ட் கொடுங்கள். ஓ.பன்னீர்செல்வம் சொல்லுக்கு கட்டுப்பட்டு விசாரணை கமிஷன் அமைத்தார்கள் எனில் மக்கள்தான் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
விசாரணை கமிஷன் நாங்கள் கேட்கவில்லை. சிபிஐ விசாரணை தான் கேட்கிறோம் என ஓபிஎஸ் ஆதரவு கே.பி.முனுசாமி கூறியது தொடர்பாக பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் வைப்பதில் என்ன தவறு வந்துவிட போகிறது. அதற்கு ஏன் தயங்குகிறார்கள். இதனை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கும் சிபிஐ விசாரணை தேவை என்றால், தமிழ்நாட்டு போலீசாரை நம்பவில்லையா? தமிழ்நாட்டு நீதிபதியை நம்பவில்லையா? மத்திய அரசைத்தான் இந்த ஓபிஎஸ் அணியினர் விரும்புகிறார்களா? சத்தியமாக சொல்கிறேன் ஓபிஎஸ் தரப்பும், பழனிசாமி தரப்பும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை" என்றார்.