டிரெண்டிங்

வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு புகார் - தேர்தல் ஆணையரை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு

வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு புகார் - தேர்தல் ஆணையரை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு

rajakannan

வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு புகார் தொடர்பாக, தேர்தல் ஆணையரிடம் முறையிட எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. 

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியுஷ் கோயல் தாக்கல் செய்தார். இதில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். ‘நாட்டை காப்போம், ஜனநாயகத்தை காப்போம்’ என்ற இந்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. 

ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, சரத் பவார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். அதேபோல், திரிணாமூல் எம்.பி ஓ’பிரையான், சமாஜ்வாடி எம்.பி ராம்கோபால் யாதவ், லோக்தன்ரிக் ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, பகுஜன் சமாஜ் கட்சியின் சதிஸ் சந்திரா மிஸ்ரா, ஆர்ஜேடி கட்சியின் மனோஜ் ஜா, திமுக எம்.பி கனிமொழி, ஆர்.எல்.டி ஜெயந்த் சவுத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தனிஷ் அலி, ஹிந்துஸ்தானி அவம் மோர்சாவின் ஜிதின் ராம் மாஞ்சி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய ராகுல் காந்தி, “வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து தேர்தல் ஆணையடத்திடம் திங்கட்கிழமை கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, ஜனநாயக நிறுவனங்கள் மீதான மோடி அரசின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்” என்றார்.