காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 15 ஆயிரம் சதுரஅடி வளாகத்தை வாடகை செலுத்தாத ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து அறங்காவலர் குழுவினர் மீட்டனர். ஆனால், ஆக்கிரமிப்பாளர் உள்ளே தூங்கிக்கொண்டிருந்ததை அறியாமல் அவரை உள்ளேயே வைத்து சீல் வைத்தது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெருவில் நகரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 15,000 சதுரஅடி நிலத்தை 12 ஆண்டுகளாக ஒருவர் வாடகை செலுத்தாமல் ஆக்கிரமித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கோயிலின் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோயில் ஊழியர்களுடன் சென்றும் அந்த இடத்துக்குப் பூட்டு போட்டு சீல் வைத்துச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பிறகு பூட்டிய வளாகத்துக்குள் இருந்து குரல் வருவதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அறங்காவல் துறையினர் வந்து சீலை அகற்றி உள்ளே இருந்த நபரை வெளியே செல்ல அனுமதித்தனர்.