மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பை காங்கிரஸ் கட்சி கொண்டுவர உள்ள புதிய திட்டம் அதனை ஈடுசெய்யும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரங்களில் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை, புதிய திட்டங்களை அள்ளி வீசுவது வழக்கம். இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நாட்டிலுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தப் போவதாக கூறியது. அதன்படி ஏழை குடும்பங்கள் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயை ஈட்டுவதை உறுதிப்படுத்தும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். அத்துடன் அவர், ஏழை மக்களின் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும், இது போன்ற திட்டம் உலகில் எங்குமே செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிடிஐ நிறுவனத்திற்கு ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “காங்கிரஸ் கட்சியின் 'நியாய்’(Nyay) திட்டம் மக்களுக்கு அதிக பயனளிக்கும் திட்டம். இதில் 2 நன்மைகள் உள்ளன. ஒன்று நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிப்பது. மற்றொன்று பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரம் அடைந்த வீழ்ச்சியை சரி செய்வது ஆகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பாதிப்பு அடைந்தவர்களுக்கு இந்தத் திட்டம் கைக்கொடுக்கும்.
மேலும் பாஜக பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி திட்டம் ஆகியவற்றை அவசரமாக நிறைவேற்றியது போல் நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம். கடந்த ஐந்து ஆண்டுகள் மோடியின் அரசு சிறப்பாக செயல்பட்டிருந்தால் இந்தியாவில் வறுமையே இருந்திருக்காது. இந்தத் திட்டம் தேர்தலுக்கான திட்டமில்லை ஏழை மக்களுக்கான ஒன்று. எங்களின் ஒரே நோக்கம் இந்தியாவில் வறுமையை ஒழிப்பதே ஆகும். அதற்கான முக்கிய திட்டம்தான் ‘நியாய்’ திட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி அறிவித்துள்ள இத்திட்டம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், “இது ஒரு புரட்சிகரமான திட்டம். இந்தத் திட்டத்தின் நோக்கம் மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்குவது. அத்துடன் இதன் மூலம் 25 கோடி பேர் பயனடைவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.