வாக்குப்பட்டியலில் என் பெயர் இல்லை. இது யாருடைய தவறு என நடிகர் ரமேஷ் கண்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் துணை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கும் ஓட்டு இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ஒரு குடிமகனின் கடமை ஓட்டு போடுவதுதான் என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் பக்காவாக செய்கிறார்கள். அதனால் அந்த உணர்ச்சியுடன் இன்று காலை 6 மணிக்கு வாக்குச்சாவடிக்கு சென்றேன். என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. கிட்டதட்ட 4 அல்லது 5 தேர்தல்களில் அந்த வாக்குச்சாவடியில் தான் வாக்களித்துள்ளேன். நான் இன்று நாகர்கோவில் செல்ல வேண்டியுள்ளதால் முதல் ஆளாக வாக்குசாவடியில் நின்றேன்.
ரொம்ப நேரம் நின்ற பிறகு 7 மணிக்கு அவர்கள் சொல்கிறார்கள் வாக்கு பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்று. என்ன காரணம்? அது யாருடைய தவறு? என்னுடைய தவறு கிடையாது. வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்களிப்பதற்கான உரிமையை நீங்கள் எனக்கு தரவேண்டும். சர்க்கார் படம் வந்த மாதிரி இதுக்கு ஒரு பிரச்னை கொண்டு வரணுமா? என் மனைவிக்கு ஓட்டு இருக்கா, எனக்கு இல்லையாம். இதற்கு யாரு பொறுப்பு. என்னுடைய ஓட்டு வீணாகிவிட்டது. இனி நான் எப்படி ஓட்டு போடுவது.
இதற்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகணும். அப்புறம் எப்படி குடிமகன்கள் ஓட்டு போடுங்கள் என்றால் எப்படி போடுவார்கள். வெறுத்து போய்விடும். ஓட்டு போட ஆட்களே வரமாட்டார்கள். கட்சிகாரர்கள் மட்டும்தான் ஓட்டு போடுவார்கள். புதிய ஆட்களோ, புதிய தலைமுறையோ, புதிய தலைவர்களோ வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது. சினிமாக்காரர்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் என் ஓட்டை எடுத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.