டிரெண்டிங்

குஜராத் தேர்தலில் போட்டியிடும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானிக்கு பிடிவாரண்ட்

குஜராத் தேர்தலில் போட்டியிடும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானிக்கு பிடிவாரண்ட்

rajakannan

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளருடன் நேரடியாக மோதும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் அனுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை தடுத்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த கூடுதல் மெட்ரோபொலிடன் நீதிபதி லங்கா, ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 13 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வாட்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் இருந்தால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று மேவானியின் வழக்கறிஞர் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி அகமதாபாத் ரயில் நிலையத்தில் மேவானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மேவானி உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, மேவானி உள்ளிட்டோர் ஆஜராகவில்லை.

மேவானி போட்டியிடும் வாட்கம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என்று காங்கிரஸ் அறிவித்ததோடு அவருக்கு ஆதரவும் அளித்தது. அதேபோல், ஆத் ஆத்மி கட்சியும் மேவானிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, ஆதரவாக பிரச்சாரம் செய்வதாகவும் அறிவித்துள்ளது. இதனால் வாட்கம் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜய் சக்ரவர்த்திக்கும், ஜிக்னேஷ் மேவானிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.