அதிமுக பொதுக்குழு கூடி எடுத்த முடிவுகளை கேள்வி கேட்க முடியாது என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலாவின் ஆதரவாளராக கருதப்பட்ட தம்பிதுரை முதன் முறையாக சசிகலா நீக்கம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, " பொதுக்குழு கூடி எடுத்த முடிவை எங்களால் கேள்வி கேட்க முடியாது. அது கழகத்தின் உரிமை. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதால், இதுகுறித்து மேலும் சொல்வதற்கு எதுவுமில்லை" என்றார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 12-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. இதில், தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது ரத்து, கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் டிடிவி தினகரன் நியமிக்கும் நியமனங்கள் எதுவும் செல்லாது என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.