வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்களுக்கு பொருந்தாதா என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக தற்போது எல்லா துறைகளிலுல் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்று வெளிப்படையாகவே பலமுறை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் கமல் தனது ட்விட்டரில், “வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா. சொகுசு விடுதிகளில் தங்கி குதிரை பேர அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு இல்லையா. மதிப்பிற்குரிய நீதிமன்றம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கண்டித்துள்ளது. அதேபோல், தமது பணிகளை செய்யாமல் உள்ள எம்எல்ஏக்களுக்கும் நீதிமன்றம் இதே எச்சரிக்கையை உடனடியாக விடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.