டிரெண்டிங்

விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: மு.க.ஸ்டாலின்

விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: மு.க.ஸ்டாலின்

rajakannan

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டில் அறிவித்திருந்தார். ஆனால், இந்த விசாரணை கமிஷன் அறிவிப்பு நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. 

இந்த நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் உண்மையை கொண்டுவர ஏற்புடையதல்ல என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஜெயலலிதா மரணத்தில் பெரிய மர்மம் இருப்பதை அமைச்சர்கள் தங்களது பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார்கள். மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த உண்மைகள் வெளிவர வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் அவசரமாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், “இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ரிச்சர் பீலே, சிங்கப்பூர், எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்களை விசாரிக்க வேண்டியுள்ளதால், சிபிஐ விசாரணைதான் உகந்ததாக இருக்கும்” என்று ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.