டிரெண்டிங்

டிவி விவாதங்களில் பங்கேற்க தலைவர்களுக்கு தடை? - காங். விளக்கம்

டிவி விவாதங்களில் பங்கேற்க தலைவர்களுக்கு தடை? - காங். விளக்கம்

rajakannan

டி.வி. விவாதங்களில் கேரள காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பதற்கு தடையில்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமசந்திரன் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியை எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி, அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, தேசிய அளவிலான செய்தி தொடர்பாளர்கள், டிவி.சேனல்களில் பங்கேற்க, ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் கட்சி தடை விதித்துள்ளது. இதை அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், “டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை ஒரு மாதத்துக்கு அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் பிரதிநிதிகளை சேனல்கள் அழைக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், கேரள காங்கிரஸ் தலைவர்கள் டிவி விவாதங்களில் பங்கேற்பதற்கு தடையில்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமசந்திரன் கூறியுள்ளார். 

தேசிய அளவிலான சில காங்கிரஸ் தலைவர்கள் விளம்பரம் தேடிக்கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக விவாதத்தில் கலந்து கொள்வதாக புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர்கள் விவாதங்களில் பங்கேற்பதை மத்திய தலைமை வரவேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.