டிரெண்டிங்

கமல்ஹாசன் V/S வானதி சீனிவாசன் - சூடுபிடிக்கும் கோவை தெற்கு தொகுதி அரசியல் களம்!

kaleelrahman

நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடையே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் முடிந்ததும் பிக்பாஸ், சினிமா பக்கம் சென்றுவிடுவார். மக்கள் குறைகளை நான் தான் கேட்பேன் என பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் கமல்ஹாசன் குறித்து விமர்சனத்தை முன் வைத்தார்.

இது மக்களிடம் பேசும் பொருளாகவே மாறிவிட்டது. இந்த விமர்சனத்திற்கு மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் நிர்வாகிகளும், கமல்ஹாசனும் காட்டமாகவே பதில் அளித்தனர். என் நடிப்பை கேவலமாக சொல்கிறார்கள். நடிப்பு என் தொழில் அரசியல் என் கடமை என சூளுரைத்தார்.

இந்நிலையில் இன்று காலை முன்னறிவிப்பின்றி கமல்ஹாசன் நடைபயணம் மேற்கொண்டதோடு மக்கள் சந்திப்பு, மற்றும் பேருந்து, ஆட்டோ பயணம் என ஊடகத்துக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கோவையில் சுழன்றடித்தார்.

இந்த சூழ்நிலையில் கமல்ஹாசன் ஆட்டோ பயணம் மேற்கொண்டதற்கு போட்டியாக வானதி சீனிவாசனும் கட்சி அலுவலகத்திற்கு ஆட்டோவில் பயணம் செய்தார். அந்த புகைப்படத்தை அவரது ஆதரவளார்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதனால் ஸ்டார் அந்தஸ்து பெற்ற கோவை தெற்கு தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.