டிரெண்டிங்

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்; நடைமுறைப்படுத்தியது பாஜக - சீமான் தாக்கு

webteam

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் என்றும் அதனை நடைமுறைப்படுத்தியது பாரதிய ஜனதா கட்சி என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் “ நீட் எதிர்ப்பு விவகாரத்தில் அரசியல் போராட்டம் நடக்கிறது. ஆனால் மாநில அரசு போராடினால் தான் அழுத்தம் இருக்கும். நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தது. அதனை பா.ஜ.க நடைமுறைப்படுத்தியது. நீட் விவகாரத்தில் அரசியல் லாபம் பெறுவதற்காகத்தான் தான் எங்களால் விலக்கு அளிக்க முடியும் என திமுக பேசுகிறது. கல்வி என்பது மாநிலத்தின் உரிமை. அது அவசியம்.

இந்தி மொழி திணிப்பைதான் தான் மத்திய அரசு செய்கிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் இந்தி திணிப்பு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை தனியார்துறையை வளப்படுத்துவதற்கானத் திட்டம். இது மாணவர்களுக்கு எதிரானது. இதனால் மன அழுத்தம் தான் ஏற்படும்.

அதிமுக, திமுக தொண்டர்களை திருப்திப்படுத்த தான் ஆட்சியை பிடிப்போம் என பேசி வருகின்றனர். தனித்து தான் நாம் தமிழர் கட்சி வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியில் இருந்தவர்களால் எந்த சிக்கலும் இல்லை. அந்த பிரச்னையை கடந்து நாம் தமிழர் கட்சி தன்னுடைய பணிகளை செய்து வருகிறது.”என்றார்.