நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரி திமுக நடத்தும் மனிதச்சங்கிலியில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் கட்சி பேதமின்றி பங்கேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய தமிழக அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி கெஞ்சிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து தற்காலிக விலக்கு பெறுவது தப்பிக்கும் தந்திரம் என்றும், அதனைக் கைவிட்டு நிரந்தர தீர்வு கிடைக்க உரத்தக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தவணை கேட்பதற்கும், தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும் நீட் தேர்வு விலக்கு விவகாரம் என்பது மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியமல்ல என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே தேர்வு என அறிவித்துவிட்டு, ஒரே மாதிரி கேள்வித்தாள் வழங்காததால் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.