காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியுடன் ஸ்பானிஷ் நடிகை நதாலியா ராமோஸ் இடம் பெற்ற புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
சமீபத்தில் அமெரிக்காவிற்குப் பயணம் சென்றிருந்தார் ராகுல்காந்தி. அங்கே அவர் குடும்ப அரசியலை நியாயப்படுத்தி பேசியதை ஸ்மிதிராணி கடுமையாக விமர்சித்திருந்தார். அதைபோலவே ராகுல் வன்முறையை நான் ஏற்கமாட்டேன். அதற்காக என் அப்பாவை இழந்திருக்கிறேன். என் பாட்டியை இழந்திருக்கிறேன் என்று உருக்கமாகவும் பேசியிருந்தார். அந்தப் பேச்சு உலக அளவில் அவரை கவனிக்க செய்தது.
அந்தப் பேச்சைவிட இப்பொழுது அதிகமாக அடிப்படும் விஷயம் நதாலியா போட்டோ. அவருடன் ராகுல் மிக சாதாரணமாக நிற்கும் படம் வைரலாகி வருகிறது. கூடவே அந்த நதாலியா யார் என வலைப்போட்டு தேடி வருகிறார்கள்.
நதாலியா செப்டம்பர் 14ஆம் தேதியன்று இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இந்தப் புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார். அதில் ''வெளிப்படையான, அறிவார்ந்த ராகுலுடன் நேற்று இரவு இருந்தேன். உலகின் வேறுபட்ட பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பல்வேறு கோணங்களை கொண்ட சிறந்த மனிதர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்." என எழுதியிருந்தார். மேலும் ''வெளிப்படையான மனதை கொண்ட அறிவார்ந்தவர்களுடன் இணைந்து இந்த உலகை நாம் மேலும் மேம்படுத்தலாம். எனது அறிவை திறந்துவிட்டதற்கு நன்றி” என்றிருக்கிறார்.
நதாலியாவின் முழுப்பெயர் நதாலியா ராமோஸ் கோஹேன். ஸ்பானிஷ்-ஆஸ்திரேலிய நடிகையான அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
2007 ஆம் ஆண்டில் 'ப்ரட்ஸ்' திரைப்படத்தில் யாஸ்மின் என்ற கதாபாத்திரத்திலும், 2013 ஆம் ஆண்டு 'த டாம்ட்' திரைப்படத்தில் ஜில் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் 1992 இல் ஸ்பெயினில் மாட்ரிட் நகரில் பிறந்தவர். தாய் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர், தந்தை ஸ்பெயினை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகர் ஜுவான் கார்லஸ் ராமோஸ் வகேரோ. இரண்டு வயதாக இருக்கும்போது ஆஸ்திரேலியா சென்ற நதாலியா, பிறகு மியாமி சென்று அங்கேயே வளர்ந்தார். 2016ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்றார் நதாலியா.