டிரெண்டிங்

‘துரத்தி பழி வாங்கும்.. பால் குடிக்கும்’ பாம்புகளைப் பற்றியக் கட்டுக்கதைகள்..!

‘துரத்தி பழி வாங்கும்.. பால் குடிக்கும்’ பாம்புகளைப் பற்றியக் கட்டுக்கதைகள்..!

Sinekadhara

இன்று உலக பாம்புகள் தினம். பாம்புகள் நமது சுற்றுச்சூழல் அமைப்பில் ஓர் முக்கிய அங்கம். பாம்புகளைப் பற்றிய சில கட்டுக்கதைகள்...

கதை 1:

பாம்பு பால் குடிக்கும்

மற்ற விலங்குகளைப் போலவே பாம்பும் தனது உடல் வறட்சியைப் போக்க தண்ணீர் குடிக்கும். நீண்ட நாட்கள் எதுவும் சாப்பிடாத பாம்புக்கு பால் வைத்தால் குடிக்கும். சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது. பாலை குடிக்கும்படி கட்டாயப்படுத்தினால் சில நேரம் இறந்துபோக வாய்ப்பு உண்டு.

கதை 2:

பாம்பின் தலையில் அல்லது தொண்டையில் மாணிக்க கல் வைத்திருக்கும்

மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களைப் போலவே பாம்பின் உடலும் செல்கள் மற்றும் தசைகளால் ஆனது. அதன் உடலில் வைர, மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கற்களெல்லாம் இருக்காது. இதுபோன்ற பொய்யான நம்பிக்கையால்தான் ஏராளமான பாம்புகள் கொல்லப்படுகின்றன.

கதை 3:

யாராவது தன் துணையைக் கொன்றுவிட்டால் அவர்களுடைய முகத்தை நினைவில் வைத்துக்கொண்டு பழி வாங்க எவ்வளவு மைல் தூரம் வேண்டுமானாலும் போகும்

பாம்புகளுக்கு அறிவு வளர்ச்சிக் குறைவு. தன் இரையை மட்டும்தான் துரத்த தெரியும். மேலும் கண் ஒளி கூட மிகவும் குறைவுதான். அதை சீண்டினால்தான் நமக்கு ஆபத்து.

கதை 4:

இசைக்கேற்ப ஆடும்

பாம்புகள் தன் முன்னால் இருக்கும் இரையைப் போன்றோ அல்லது அதற்கு முன்பாக இருக்கும் ஒரு பொருளைப் போன்றோதான் தனது உடலை அசைக்கும். மேலும் காது கேட்காது. ஆனால் அதிர்வுகளை உணரும் தன்மை கொண்டது. இதை பயன்படுத்தித்தான் பாம்பாம்பாட்டிகள் தங்களது தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

கதை 5:

எல்லா பாம்புகளும் விஷம் கொண்டது

பார்த்தவுடனே பாம்புகள் கடிக்காது. சில நேரங்களில் தெரியாமல்கூட கடித்துவிடும். மேலும், எல்லா பாம்பிலும் உயிரைக் கொல்லும் விஷம் இருக்காது. இந்தியாவில் ஏறக்குறைய 270 பாம்பு இனங்கள் உள்ளன. அதில் 60 வகை பாம்புகள்தான் அதிக விஷம் கொண்டது. பாம்பு கடித்தாலும் சரியான நேரத்தில் சிகிச்சை கொடுத்தால் காப்பாற்றிவிடலாம்.

கதை 6:

சில பாம்புகளுக்கு நிறைய தலைகள் இருக்கும்

மரபணுச் சிதைவால் அரிதாக சில பாம்புகளுக்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தலைகள் இருக்கும். இது ஊர்வனவற்றில் இருக்கும் பொதுவான ஒன்று. இதுபோன்ற புராணக் கட்டுக்கதைகள் நிஜத்தில் சாத்தியமல்ல.

 நன்றி: Sudha Ramen IFS