கோவில்பட்டி அருகே இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடிய கும்பல், காவல்துறையை கண்டதும் தப்பியோட்டம்... மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் அதிகளவு மயில்கள் காணப்படுகின்றன. இந்த மயில்கள் சமூக விரோத கும்பல்களினால் வேட்டையாடப்படுவதாக தொடர்ச்சியாக புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எட்டயபுரத்தை அடுத்துள்ள முத்துலாபுரம் கிராமம் பகுதியில் சில இளைஞர்கள் மயில்களை வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த இளைஞர்கள் மயில்கள் மற்றும் வாகனங்களை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
அங்கு இறந்த நிலையில் கிடந்த 6 மயில்கள் மற்றும் 4 பைக்குகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவற்றை விளாத்திகுளம் வனத்துறை அதிகாரி ஆனந்திடம் போலீசார் ஒப்படைத்தனர். இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடிய கும்பல் போலீசார் வந்ததும் தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசாரும், வனத்துறையினரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக தேசிய பறவையான மயில்கள் சமூக விரோத கும்பலால் வேட்டையாடப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.