டிரெண்டிங்

“இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்” - பிரகாஷ்ராஜ்

webteam

மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலின் முடிவு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையவுள்ளது.

இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளரும் உள்ள நிலையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட தோல்வியை தழுவியுள்ள பிரகாஷ்ராஜ், அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  ''என் கன்னத்தில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. கேலிகளும், விமர்சனங்களும் என் மேல் வைக்கப்படும். எனது நிலையில் இருந்து நான் மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய பயணம் தொடங்கியுள்ளது. எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்’’ என தெரிவித்துள்ளார்