டிரெண்டிங்

நெருப்பில் குழந்தைகள் எரிந்ததன் கோப வெளிப்பாடே என் கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா

rajakannan

கந்துவட்டி கொடுமையால் நெருப்பில் எரிந்து குழந்தை இறந்ததன் கோப வெளிப்பாடே என்னுடைய கேலிச்சித்திரம் என்று கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து பாலா கார்ட்டூன் ஒன்றினை தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விமர்சித்து அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது. இந்த கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்த கார்ட்டூனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரின் புகாரின் பேரில் பாலா நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது பேசிய பாலா, கந்துவட்டி குறித்து வரைந்த கேலிச்சித்திரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கந்துவட்டி கொடுமையால் நெருப்பில் எரிந்த குழந்தை இறந்ததன் கோப வெளிப்பாடே என் கேலிச்சித்திரம் என்றும் கூறினார்.