டிரெண்டிங்

டிண்டரில் தங்கச்சியை தேடிய மும்பை இளைஞர்.. ஏன் தெரியுமா? நெகிழ வைக்கும் சுவாரஸ்ய கதை!

டிண்டரில் தங்கச்சியை தேடிய மும்பை இளைஞர்.. ஏன் தெரியுமா? நெகிழ வைக்கும் சுவாரஸ்ய கதை!

JananiGovindhan

டேட்டிங் செயலிகள் மூலம் பலரும் முகம் தெரியாதவர்களுடன் நட்பாக பழகி காதல் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதே டேட்டிங் ஆப்ஸ்கள் மூலம் சில மோசடிகளும் அவ்வப்போது நடைபெறுவது செய்திகளின் வாயிலாக தெரிய வருகிறது.

இப்படி இருக்கையில் பிரபலமான டேட்டிங் செயலியான டிண்டரில் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு சகோதரிகள் தேவை என்றும் அவர்களுடன் ரக்‌ஷாபந்தனுக்கு உலா வர வேண்டும் எனக் கேட்டு பதிவிட்டிருப்பது இணையவாசிகளை குழப்பமடையவும், அதிர்ச்சி அடையவும் வைத்திருக்கிறது.

பொதுவாகவே சகோதரர் அல்லாத ஆண்களுக்கு ரக்‌ஷாபந்தன் கயிறு கட்டினால் அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த நபர் சகோதரிகள் வேண்டும் என பதிவிட்டது நெட்டிசன்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

இதில் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், சகோதரி வேண்டும் எனக் கேட்டவருக்கு இரண்டு பெண்கள் ரக்‌ஷாபந்தனை கொண்டாட முன்வந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து டிண்டர் தளத்திற்கு நன்றி தெரிவித்து ரெடிட் தளத்தில் ஒரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார். அதில், “நன்றி டிண்டர், இப்போது எனக்கு இரண்டு சகோதரிகள் டிண்டர் மூலம் கிடைத்திருக்கிறார்கள்.

நாங்கள் மூவரும் இணைந்து இந்த ஆண்டு ரக்‌ஷாபந்தனை கொண்டாடி பரிசுகளை பரிமாறிக்கொள்ள இருக்கிறோம். எனக்கு உற்சாகமாக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுபோக, தனக்கு ஒரு சகோதரி கூட இல்லாததால் இதுநாள் வரையில் ரக்ஷாபந்தன் அன்று தனியாகத்தான் இருந்தேன் என்றும், இதனால் தனக்கு ராக்கி கட்டவும் யாரும் இல்லை, யாருக்காக பரிசுகளை வாங்கி கொடுப்பது என்றும் தன்னுடைய ஆதங்கத்தை அந்த ரெடிட் பதிவில்
குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரக்ஷாபந்தனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அந்த நபர் தனது பயோவை மாற்றத் தொடங்கினார். இந்த ஆண்டு அவருக்கு ரக்‌ஷாபந்தனை கொண்டாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது அவரது பதிவின் மூலம் தெரிய வந்திருக்கிறது.