டிரெண்டிங்

சிஎஸ்கே Vs மும்பை இண்டியன்ஸ்: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை !

சிஎஸ்கே Vs மும்பை இண்டியன்ஸ்: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை !

jagadeesh

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு எப்படியொரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதுபோல ஐபிஎல்லில் சிஎஸ்கே - மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பார்க்கப்படும்.

ஏனென்றால் ஐபிஎல் தொடரில் சரிசமமான பலம் கொண்ட அணியாக சிஎஸ்கே - மும்பை இண்டியன்ஸ் பார்க்கப்படுகிறது. இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இண்டியன்ஸ் அணி 4 முறையும் சிஎஸ்கே 3 முறையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் 3 முறை நேரடியாக மோதியிருக்கிறது. அதில் மும்பை 2 முறையும் சிஎஸ்கே ஒரு முறையும் வெற்றிப் பெற்று இருக்கிறது.

இதுவரை ஐபிஎல்லில்...

மும்பை - சென்னை அணிகள் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 28 முறை மோதியுள்ளன. அதில் 17 முறை மும்பையும் 11 முறை சிஎஸ்கேவும் வென்று இருக்கிறது. இதில் மும்பை அணியின் கையே ஓங்கியிருக்கிறது. அதிலும் 2018, 2019 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி உள்பட சென்னையுடன் மோதிய 5 போட்டிகளிலும் மும்பை வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 60 சதவீத வெற்றியை மும்பை பெற்றுள்ளது.

பெஸ்ட் பேட்ஸ்மேன் யார் ?

சென்னைக்கு எதிரான போட்டிகளில் மும்பையை பொறுத்தவரை ரோகித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் இதுவரை மொத்தமாக 614 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல மும்பைக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 704 ரன்களை குவித்துள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா இல்லாததால் அனைவரின் கண்களும் தோனியின் மேல் விழுந்திருக்கிறது. அவர் இதுவரை மும்பைக்கு எதிராக 663 ரன்களை சேர்த்துள்ளார்.

பவுலிங்கில் யார் கெத்து ?

மும்பைக்கு எதிரான போட்டியில் இதுவரை சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல மும்பை தரப்பில் லசித் மலிங்கா 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இந்தாண்டு மலிங்கா ஐபிஎல் போட்டியில் பங்கேற்காதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.