டிரெண்டிங்

‘ஔரங்கசீப் ஒரு பயங்கரவாதி’: பாஜக எம்.பி. மீண்டும் சர்ச்சை

‘ஔரங்கசீப் ஒரு பயங்கரவாதி’: பாஜக எம்.பி. மீண்டும் சர்ச்சை

rajakannan

முகலாய அரசர் ஔரங்கசீப் ஒரு பயங்கரவாதி என்று பாஜக எம்.பி. மகேஷ் கிரி கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் ஔரங்கசீப் மற்றும் அவரது சகோதரர் தாரா சுகோவ் குறித்த கதை மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ‘தாரா சுகோவ், மறக்கப்பட்ட இஸ்லாமிய அரசர்’என்ற பெயரில் நடைபெற்றது. தாரா சுகேவ், தாரா சிகோவ் என்று அழைக்கப்படுகிறது. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுகோவ், மிகச்சிறந்த அறிஞராக அறியப்படுகிறார். தனது சகோதரர் ஔரங்கசிப்பால் கொல்லப்பட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேஷ் கிரி, “ஔரங்கசீப் ஒரு பயங்கரவாதி. அவர் தண்டனை கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அது கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் அவர் பெயரில் உள்ள சாலையாவது மாற்றப்பட்டுள்ளது” என்றார்.

டெல்லியில் இருந்த ஔரங்கசீப் சாலையின் பெயரை டாக்டர் ஏபிஜே கலாம் சாலை என்று கடந்த 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டது. டெல்லி கிழக்கு பகுதி எம்.பி.யான கிரி தான், ஔரங்கசீப் பெயரை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். 

கிரி பேசுகையில், “கொடூர அரசரான ஔரங்கசீப் பெயரிலான சாலை இருப்பதை கண்டு அப்பொழுது நான் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். ஔரங்கசீப்பெயரில் சாலை இருப்பது இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கே எதிரானது. நாட்டின் நலனிற்கும் ஏற்புடையதல்ல. அதனால் அதனை மாற்ற வேண்டும் என்று முயற்சித்தேன்” என்று கூறினார்.

மேலும், “பள்ளிகளில், ஔரங்கசீப் குறித்து பாடம் நடத்தும் போது, நீங்கள் அவரது சகோதரர் குறித்தும் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான், ஒரு சமநோக்கு பார்வையை உருவாக்கும், நல்லவர் யார், கெட்டவர் யார் என்பது தெரியும். ஔரங்கசீப்பை பற்றி மட்டும் படம் நடத்தினார் அது வரலாற்றை தவறாக சித்தரிக்கும்” என்றார் கிரி.

பிறப்பால் இஸ்லாமியரான தாரா சுகோவ் இந்தக் கோயில்களுக்கு நிதி அளித்தவர், இந்துக்களின் சடங்கு சம்பர்தாயங்களை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.