டிரெண்டிங்

மஞ்சள் சீருடையில் வேட்டை தொடரும்... பச்சை கொடி காட்டிய தோனி

மஞ்சள் சீருடையில் வேட்டை தொடரும்... பச்சை கொடி காட்டிய தோனி

webteam

ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது நிச்சயமாக ஓய்வு இல்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் தோனி. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி சொதப்பலாக விளையாடியதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறுகிறது.

ஆனால் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அது வெற்றியோ தோல்வியோ எதிரணி வீரர்கள் தோனியிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள். அவர்களிடம் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துக்கொள்வார் தோனி. கொல்கத்தா அணியுடனான வெற்றிக்கு பின்பு நேற்றுக் கூட வருண் சக்கரவர்த்தி தோனியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.

இது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணியின் வீரர்கள் பலரும் ஜெர்சியில் தோனியிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர். இதற்குமுன்பு மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கும் ஜெர்சியில் கையெழுத்திட்டு பரிசாக கொடுத்தார் தோனி. இதனால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வுப்பெற்றுவிடுவார். அதனால்தான் வீரர்கள் இப்போதே அவரின் நினைவாக கையெழுத்து வாங்குகின்றனர் என்று கிசுகிசு கிளம்பியது.

இந்நிலையில் இன்று அபுதாபி மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இதற்கு முன்பாக டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் ஐபிஎல்லில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி நிச்சயமாக இல்லை என பதிலளித்தார்.