ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். ஆனால் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறவிருந்த அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கூட்டம் நடைபெறாது என்பதால் வேட்பாளர் தேர்வும் தாமதமாகியுள்ளது. இருப்பினும் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் எம்.பி. பாலகங்கா உள்ளிட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர்.
இதற்கிடையே தஞ்சையில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வைத்திலிங்கம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எந்த குளறுபடியும் இல்லை. யார் எது சொன்னாலும் அது தவறான செய்தி. புரட்சித்தலைவரின் வழிகாட்டுதலின் படி முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் சிறப்பாக அதிமுகவை வழி நடத்துகிறார்கள். ஏற்கனவே 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் அணியுடன் இணைந்துள்ளனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தால் இருகரம் கூப்பி வரவேற்கிறோம்” என்று கூறினார்.