மனித விலங்கு தாக்குதல்கள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காணப்பட்டாலும், விலங்குகளின் சேட்டைகள், அவற்றை காப்பாற்றுவது, அவற்றுடன் அன்பாக இருப்பது போன்ற காணொலிகளும் பரவுவதில் தவறவில்லை.
அந்த வகையில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றைதான் தமிழக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, காணாமல் போன குட்டி யானையை தேடிக் கண்டுபிடித்து அதன் தாய் யானையிடம் தமிழக வனத்துறை அதிகாரிகள் சேர்த்திருக்கிறார்கள். தன்னுடைய குட்டி தன்னிடம் வந்து சேர்ந்ததும் அதனை வாஞ்சையுடன் முன்னே செல்லவிட்டு பின் தொடர்ந்த தாய் யானை வனத்துறை அதிகாரிகளை பார்த்து தனது துதிக்கையை அசைத்து நன்றி தெரிவித்து ஆசுவாசமாக செல்கிறது. வனத்துறையினரும் பதிலுக்கு யானைக்கு தங்களது கையை அசைத்து வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த அழகான நெகிழ்வான காட்சியின் வீடியோவை பகிர்ந்த சுப்ரியா சாஹூ, “"அந்தி சாயும் போது அமைதியாக காட்டு விலங்குகள் பள்ளத்தாக்கு பகுதிகளுக்குத் திரும்புகிறது. அந்த சமயத்தில்தான் வனத்துறையினர் ஓய்வெடுக்க தயாராவார்கள். ஆனால் எங்காவது, வனத்துறையினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவேச் செய்கிறார்கள். அப்போதுதான் காட்டு விலங்குகள் தான் இழந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சிகளைத் தொடர்கின்றனர்.
அந்த வகையில்தான் நேற்று தமிழக வனத்துறையினர் பிரிந்துச் சென்ற தாய் யானையின் குட்டியை தேடி கண்டறிந்து தாயுடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அப்போது தாய் யானை நன்றி கூறி விடைபெற்றிருக்கிறது. அதை காண தவறவிடாதீர்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் யானையின் நன்றி உணர்ச்சியை எண்ணி நெகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகிறார்கள்.