நாமக்கல்லில் மர்மமாக உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா ? என விசாரிக்கப்பட்டு வருகிறது.
கோடை வறட்சியால் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையின் காரணமாக வனப்பகுதி மற்றும் மலை பகுதிகளில் இருக்கும் மயில்கள் ஊருக்குள் வரும் நிகழ்வு தமிழக உள்மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. இனப்பெருக்கத்தின் காரணமாகவும் அதிக அளவில் மயில்கள் விவசாய நிலங்களில் புகுந்துவிடுகின்றன. அந்த வகையில் ஊருக்குள் வந்த 10க்கும் மேற்பட்ட மயில்கள், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தண்ணீர் பந்தல்காடு, விழாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பழனிவேல் மற்றும் ஞானசேகரன் ஆகியோரின் விவசாய தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த மயில்களின் சடலங்களை கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
அவை விஷம் வைத்து கொள்ளப்பட்டனவா ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய தோட்டத்தில் மயில்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.